தேர்தல் தோல்விக்குப் பிறகு என்ன பேசுவது என்று திகைத்து, அரசியல் நாகரிகமின்றி அராஜகமான வார்த்தைகளால் கூட்டணிக் கட்சிகளைத் தாக்குவது முறையல்ல என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காகவும், மக்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு மிகச்சிறந்த சித்தாந்த அரசியல் பேரியக்கமான காங்கிரஸை விமர்சிப்பதற்கு, ஒருவருக்குக் குறைந்தபட்ச அரசியல் அனுபவமாவது இருக்க வேண்டியது அவசியமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வெறும் கைதட்டல்களை வாங்குவதற்காக உணர்ச்சிவசப்பட்டு மேடைகளில் பேசப்படும் வார்த்தைகள் அனைத்தும் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் தற்காலிகமானவை என்றும் அவர் சாடியுள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே எழுந்துள்ள இந்த வார்த்தைப்போர், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.