சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயம்புத்தூரை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், காரமடை, அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், மதுக்கரை, கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 80 சதவீத குவாரிகள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதோடு ஜல்லி, கற்கள், எம் சாண்ட், போன்றவைகள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவதோடு அதற்கு உயர் அதிகாரிகள் சிலரும் துணை போகின்றனர் என்று தெரிவித்துள்ளார். அதோடு 2 யூனிட் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 12 யூனிட் வரை கற்கள் மற்றும் ஜல்லிக்கட்டு போன்றவைகள் எடுத்துச் செல்லப்படும் நிலையில் அது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ,எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான முறையில் செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது உண்மையா என்று தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு சட்டவிரோதமான முறையில் கல் குவாரிகள் செயல்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டவிரோதமான முறையில் கல்குவாரிகள் செயல்பட்டால் அந்த  குவாரிகள்  மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தார். மேலும் இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து  விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.