இந்த உலகம் பணத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு அதிசயம் நடந்து வருகிறது. கோழிக்கோடு கடற்கரையில் சரியாக மதியம் 2 மணி ஆனால் போதும், வானத்தில் ஒரு பெரிய மாற்றமே நிகழ்கிறது. அங்குள்ள கழுகுகளும் தெரு நாய்களும் ஒரு நபருக்காக ஏங்கித் தவம் கிடக்கின்றன. அவர்தான் அஜீஸ் சாஹிப். ​தனது பழைய சைக்கிளில் ஒரு மூட்டை சிக்கன் துண்டுகளோடு அவர் கடற்கரைக்குள் நுழையும்போது, ஒரு மாமன்னருக்குக் கிடைக்கும் வரவேற்பு அவருக்குக் கிடைக்கிறது.

அவர் கையை உயர்த்தினால் போதும், வானத்திலிருந்து கழுகுகள் கூட்டம் கூட்டமாக இறங்கி வந்து அவர் கையிலிருந்தே உணவை வாங்கிச் செல்கின்றன. சொந்த உறவுகளுக்கே நேரம் ஒதுக்க முடியாத இந்தக் காலத்தில், வாய் பேச முடியாத உயிரினங்களுக்காகத் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ள அஜீஸை, நெட்டிசன்கள் ‘ஈகிள் மேன்’ (Eagle Man) என்று கொண்டாடி வருகின்றனர். இது வெறும் உணவு கொடுக்கும் செயல் அல்ல, மொழி கடந்த ஒரு புனிதமான அன்பு!