முதலில் வடகொரியா செலுத்திய ஏவுகணையின் எதிரொலியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து கூட்டு விமான பயிற்சிகளை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா திங்கட்கிழமை மேலும் 2 ஏவுகணைகளை ஏவியுள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பொருளாதாரம் மண்டலத்திற்கு வெளியே உள்ள கடல் பரப்பில் விழுந்ததாக அந்நாட்டின் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இரண்டு ஏவுகணைகளும் 245 மைல்கள் மற்றும் 209 மைல்கள் தொலைவில் உள்ள இலக்குகளை குறிவைத்து ஏவப்பட்டது என வடகொரியா நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பான் பிராந்தியம் மற்றும் சர்வதேச நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியது என ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வடகொரியா ஜனாதிபதி கிங் ஜாங் உன் அவர்களின் சகோதரியான கிம் யோ ஜாங் கூறியதாவது “தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து தங்களுடைய ஆபத்தான பேராசையை வெளிப்படையாக காட்டுகின்றன. மேலும் கொரிய தீபகற்பத்தில் ராணுவ மேலாதிக்கம் மற்றும் முக்கிய இடத்தை பெறுவதற்கு முயற்சி மேற் கொள்கின்றன. எதிரிகளின் ஒவ்வொரு அசைவையும் நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு விரோதமான அசைவுகள் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கேற்ற சக்தி வாய்ந்த மற்றும் மிகப்பெரிய எதிர்ப்பை எடுப்போம். அதோடு அமெரிக்கா படைகளின் தன்மையை பொறுத்து பசிபிக் பகுதியை எங்கள் துப்பாக்கிச் சூடு வரம்பாக பயன் படுத்துவதற்கான ஆதரவும் தீர்மானிக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
