கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக மாநில நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், விஜயின் நடவடிக்கைகள் மீதான கடும் விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கரூரில் நடந்த பிரசார கூட்ட நெரிசலில் 7 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட பலரும் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற பேரிடர் ஏற்படக்கூடாது என்பதற்காக, முதல்கட்ட பிரசாரத்திலிருந்தே காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்தது. ஆனால், அந்த நிபந்தனைகளை எதிர்மறையாக எடுத்துக் கொண்டு, விஜய் விமர்சனம் செய்ததை நினைவுகூரலாம்.”
“ஒரு தலைவராக தனது பாதுகாப்பை மட்டும் அல்ல, பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பும் அவரது முக்கியமான பொறுப்பாக இருக்க வேண்டும். திருச்சியில் விமான நிலைய வரவேற்பில் ஏற்பட்ட நெரிசல், சொத்துச் சேதங்களை கண்டிக்காததோடு, வாரந்தோறும் இதையே மீண்டும் மீண்டும் மேற்கொண்டது, பொது ஒழுங்கு மீதும் அக்கறையின்மையை காட்டுகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
“விஜய், கூட்டம் அதிகமாக வருவதை பெருமையாக எடுத்துக் கொண்டதோடு, வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் சுற்றுப்பயண திட்டத்தை கடைப்பிடித்ததே இந்த அசம்பாவிதத்திற்கு ஒரு முக்கிய காரணமாக கருதலாம். இதனை அன்றாட நடவடிக்கையாக மேற்கொண்டிருந்தால், பெரிய சேதத்தை தவிர்த்திருக்கலாம்” எனவும் சரத்குமார் குற்றம்சாட்டினார்.
“காவல்துறையின் எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு விதிகளுக்கு ஒத்துழையாமை, இந்தச் சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். இனி வருங்காலங்களில், அரசு அறிவுறுத்தும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணக்கம் காட்ட வேண்டும்” என்றார்.
மேலும் தற்போது பிரான்சில், லூர்து அன்னையை தரிசிக்க சென்றுள்ளதாகவும், அதன் காரணமாக நேரில் வர முடியாத சூழல் வருத்தமளிக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவரும் விரைவில் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் எனவும், அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
