தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் ஜெட் வேகத்தில் தயாராகி வருகிறது. திமுக, அதிமுக, பாஜக, தவெக எனப் பிரதான கட்சிகள் தங்களது கூட்டணிக் கணக்குகளை ஏறக்குறைய முடித்துவிட்டன. தேமுதிக கூட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையப்போவதாகத் தகவல்கள் கசிகின்றன. ஆனால், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்துள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மட்டும் இதுவரை தனது முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

​சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று ஒரு பெரிய ‘குண்டை’ தூக்கிப் போட்டுள்ளார். அதாவது, வெறும் தொகுதிகளை மட்டும் வாங்கிக்கொண்டு ஆதரவு தருவதை விட, ஆட்சியில் பங்கு (Power Sharing) வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். இதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், அடுத்த வாரத்தில் முறைப்படி கூட்டணி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.