தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரிப்பது ஒருபுறம் இருந்தாலும், போடிநாயக்கனூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கையாளும் புதிய யுக்தி பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரத்தின் போது அங்கிருந்த ஒரு ஆண் குழந்தைக்கு ‘தளபதி’ என்று பெயர் சூட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று போடி மீனாட்சிபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது ஒரு பெண் குழந்தைக்கு ‘கனிமொழி’ என்று பெயர் சூட்டி மீண்டும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வாரிசுகளான மு.க.ஸ்டாலின் (தளபதி) மற்றும் கனிமொழியின் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுவதன் மூலம், ஓபிஎஸ் மாற்று அரசியல் கட்சியினரையும், பொதுமக்களையும் தன் பக்கம் ஈர்க்க முயல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தனது கோட்டையான போடியில் வாக்காளர்களின் உள்ளங்களை வெல்ல ஓபிஎஸ் எடுத்து வரும் இந்த சென்டிமென்ட் மற்றும் ‘நச்’சான பெயரிடல் மூவ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
