நடிகர் விஜய் தனது வருமானத்தை மறைத்ததாகக் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு வருமான வரித்துறை 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வருமான வரித்துறையின் உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். இதனால் அந்த 1.5 கோடி ரூபாய் அபராதத்தை விஜய் செலுத்தியே ஆக வேண்டும் என்ற சூழல் உருவானது.
இந்நிலையில், தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விஜய் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார். அபராதம் விதித்தது செல்லாது என அவர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அரசியல் மற்றும் சினிமா என இரண்டு தளங்களிலும் விஜய் பிஸியாக இருக்கும் வேளையில், இந்த நீதிமன்ற விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
