அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் தனது தந்தையுடன் வசித்து வந்த சிறுமி ஸெரபி மதினா தனது வீட்டின் அருகே இருக்கும் குழந்தைகளுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மைக்கேல் குட்மன் என்பவர் குழந்தைகள் விளையாடுவதால் அதிக சத்தம் ஏற்படுவதாக கூறி சிறுமியின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 09:30 மணி அளவில் ஸெரபி குழந்தைகள் ஓட்டும் ஸ்கூட்டரை வைத்துக்கொண்டு வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ந்து போன சிறுமியின் தந்தை உடனடியாக ஸெரபியை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதற்குள்ளாக மைக்கேல் துப்பாக்கியுடன் வந்து சிறுமியை நோக்கி சென்றுள்ளார். இதனால் தனது மகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட போவதை அறிந்த தந்தை சிறுமியை நோக்கி வேகமாக சென்றுள்ளார். ஆனால் அதற்குள்ளாக மைக்கேல் சிறுமியை தலையில் சுட்டு கொலை செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஸெரபியின் தந்தை மைக்கேலை பிடிக்க போராடியபோது மீண்டும் துப்பாக்கி தவறுதலாக சுட்டது.

இதில் மைக்கேலின் கண்ணில் காயம் ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் புலனாய்வு அதிகாரிகளின் உதவியுடன் துப்பாக்கி மற்றும் குண்டுகளின் மேற்பகுதியை கண்டுபிடித்தனர். பின்னர் காயமடைந்த மைக்கேலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததோடு அவர் மீது ஜாமினில் வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.