சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் நேற்று இந்திய விமானப்படையின் 72 ராக விமானங்கள் கலந்து கொண்ட சாகச நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டுகளித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது கடுமையான வெயில் பாதிப்பினால் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு ஏராளமானோர் உடல்நல குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய x பக்கத்தில் அவர் கூறியதாவது, சுட்டெரிக்கும் வெயிலில் சுடு மண்ணில் மக்கள் அவதிப்படும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்துள்ளனர்.

இது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன்னே நிறுத்துகிறது. பொது மக்களுக்காக குடிநீர், உணவு மற்றும் தற்காலிக கழிப்பறை போன்ற எந்த ஒரு வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் அதிக பணிச்சுமையால் உயிரிழந்தார். நிர்வாகம் ஒரு கிலோ எவ்வளவு என்று கேட்கக்கூடிய அளவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

மேலும் முன்னதாக நேற்று ஜெயக்குமார் அளித்த பேட்டியின் போது, சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடப்பது என்பது ஒரு வரப்பிரசாதம் எனவும் இந்த நிகழ்ச்சியில் 15 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று முன்னதாகவே விமான துறையில் இருந்து தகவல் வந்தும் அரசினர் ஒழுங்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். மேலும் கலைஞர் பேனா சிலைக்கும், கலைஞரின் மணிமண்டபத்திற்கும் கோடி கோடியாக செலவழிக்கும் திமுக அரசு பொதுமக்களுக்காக சாமியான பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யாததை ஏன் என்றும் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.