மத்திய சீனாவின் ஷாங்கியூ பகுதியில், குறைவான சம்பளம் வழங்கப்படுவதைக் கண்டித்து இளம்பெண் ஒருவர் அலுவலகத்திலேயே 5 மணி நேரம் தூங்கிப் போராட்டம் நடத்திய வினோத சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

“வாங்கும் சம்பளத்திற்கு இவ்வளவுதான் வேலை செய்ய முடியும்” என்ற விசித்திரமான கொள்கையோடு, அலுவலக நேரத்திலேயே மேசையின் மீது தலைசாய்த்து அவர் உறங்கியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மேலாளர், அவரை கடுமையாகக் கண்டித்ததோடு, மீண்டும் இது தொடர்ந்தால் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த அந்தப் பெண், தனது குமுறலை வீடியோவாக வெளியிட்டு, “எனது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை, அந்த அநீதியை உலகிற்குச் சொல்லவே இப்படிச் செய்தேன்” எனக் கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் விபரீதமாக மாறியுள்ளது. தூங்கி எழுந்த அந்தப் பெண், தனது முதலாளியின் மேசையிலிருந்த சாக்லேட் ஒன்றை எடுத்துச் சாப்பிட்டுள்ளார். குளுக்கோஸ் குறைபாடு (Glucose Intolerance) கொண்ட அந்த முதலாளி, தனது சர்க்கரை அளவைச் சீராக்க வைத்திருந்த அந்தத் தின்பண்டம் கிடைக்காததால் மயக்கமடைந்து விழும் நிலைக்குச் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முதலாளி, “நீ என்னைக் கொல்ல முயற்சி செய்கிறாயா?” எனக் கேட்டு அந்தப் பெண்ணை விளாசியுள்ளார். இந்தச் சம்பவம் சீன சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் அந்தப் பெண்ணின் அத்துமீறிய செயலைக் கண்டித்து முதலாளிக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.