ஹோர்முஸ் ஜலசந்தியில்  அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகைக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானுடனான தங்களது வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்றும், சீனாவுக்கான கடல்வழிப் பாதை எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டாங் ஜுன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்குத் தேவையான 40 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 30 சதவீத எல்.என்.ஜி எரிவாயு இந்த வழியாகவே வருவதால், இப்பகுதியில் அமைதி நிலவ சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானியப் துறைமுகங்களை முடக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இது பெட்ரோ டாலர் முறைக்கு மாற்றாக உருவெடுத்து வரும் சீன ‘யுவான்’ (Yuan) கரன்சியைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் போக்கு உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.