தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியான ஒன்பது பேரில், உத்தரப் பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான தினேஷ் குமார் மிஸ்ராவும் ஒருவர்.

கடந்த 15 ஆண்டுகளாக டெல்லியில் உள்ள ஒரு அச்சகத்தில் பணிபுரிந்து வந்த தினேஷ், தன் குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபர் ஆவார். இவரது மூத்த மகன் ஹிமான்ஷு (8), இவருடன் டெல்லியில் வசித்து வந்த நிலையில், மனைவி ரீனா தேவி மற்றும் இரண்டு மகள்கள் (7 மற்றும் 4 வயது) கிராமத்தில் வசித்து வந்தனர்.

தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன்புதான் குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு அவர் டெல்லி திரும்பியிருந்தார். இந்தத் துயரச் செய்தி கிராமத்தை அடைந்ததும், தினேஷின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியதுடன், கிராமமே துக்கத்தில் ஆழ்ந்தது.

குண்டுவெடிப்புச் செய்தி வெளியானதும் பதற்றமடைந்த குடும்பத்தினர், தினேஷின் அண்ணன் ராஜேஷை சம்பவ இடத்திற்கு அனுப்பிய நிலையில், அங்குச் சென்ற தினேஷின் இளைய சகோதரர் குட்டு, மரணத்தை உறுதி செய்தார். இதனைக் கேட்டுக் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர்.

தினேஷின் வீடு முன்பாகக் கூடியிருந்த கிராம மக்கள், அவரது மனைவி ரீனா தேவிக்கு ஆறுதல் கூறியதுடன், அரசாங்கத்திடம் நிதி உதவி மற்றும் இழப்பீடு வழங்கக் கோரினர். “என் கணவர் மட்டும்தான் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்.

இப்போது என் குழந்தைகளுக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை” என்று அவரது மனைவி ரீனா தேவி கண்ணீருடன் கேள்வி எழுப்பியது, அங்கிருந்த அனைவரையும் உலுக்கியது. தனது மகன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதை அறிந்த தந்தை பூரே மிஸ்ராவும் பெரும் சோகத்தில் மூழ்கினார்.