இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த தம்பதிக்கு பிறந்தவர்தான் ஷாமீயா பேகம். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய 15 வது வயதில் இங்கிலாந்தில் இருந்து வெளியேறி சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தார். அங்கு அவர் பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக நடத்தப்பட்டு மூன்று குழந்தைகளைப் பெற்று எடுத்துள்ளார். ஆனால் அந்த மூன்று குழந்தைகளும் இறந்து விட்டது. இதனை அடுத்து சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வீழ்ச்சி அடைந்ததால் ஷாமீயா பேகம் சிரியா பாதுகாப்பு படையினர் வசம் வந்தடைந்தார். அதன் பின் தற்போது சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையில் இங்கிலாந்திலிருந்து 15வது வயதில் வெளியேறி சிரியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்ததால் ஷாமீயா பேகத்தின் குடியுரிமையை 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு பறிமுதல் செய்தது. மேலும் அவர் இங்கிலாந்துக்குள் நுழைய தடை விதித்தும் உத்தரவிட்டது. இதனை அடுத்து அகதிகள் முகாமல் உள்ள ஷாமீயா பேகம் இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதிக்குமாறு இங்கிலாந்து அரசிடம் முறையீடு செய்தார். ஆனால் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததால் அவரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் தங்கள் நாட்டிற்குள் நுழைய இனி அனுமதியில்லை எனவும் ஷாமீயா பேகத்திற்கு இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஷாமீயா பேகம் இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பலமுறை அவரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது செல்லும் என கோர்ட் அறிவித்த போதும் அவர் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகிறார். அதன்படி இங்கிலாந்து கோர்ட் சிறப்பு தீர்ப்பாயத்தில் தனது குடியுரிமையை மீண்டும் வழங்கும் படியும் இங்கிலாந்துக்குள் செல்ல அனுமதிக்கும்படியும் ஷாமீயா பேகம் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் மனுவை விசாரித்த சிறப்பு தீர்ப்பாயம் ஷாமீயா பேகத்தின் இங்கிலாந்து குடியுரிமை ரத்து செல்லும் எனவும் இங்கிலாந்துக்குள் அவர் நுழைய விதிக்கப்பட்ட தடையும் செல்லும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஷாமீயா பேகத்திற்கு மிகவும் பின்னடைவாக அமைந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஷாமீயா பேகம் தரப்பினர் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.