கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்பி தாக்குதலை மேற்கொண்டதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையே போர் முண்டது. 500 நாட்களையும் தாண்டி நீடித்துவரும் இந்த போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து நிற்கிறது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் அந்நாட்டிற்கு எதிரான தாக்குதலை தீவிர படுத்த உக்கரைன் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் ஆயுத உதவியை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

அவ்வகையில் கிளஸ்டர் ஆயுதங்களின் தேவை அதிக அளவில் இருப்பதாக கூறி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார் ஜெலன்ஸ்கி. இந்நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறுகையில், “கிளஸ்டர் குண்டுகள் அதிக ஆபத்து வாய்ந்தது என்பதற்காக தான் உக்ரைனுக்கு அதனை கொடுக்க தாமதப்படுத்தப்பட்டது. ஆனால் ஆயுதபற்றாக்குறை உக்ரைனில் நிலவுவதை அமெரிக்கா விரும்பவில்லை. ரஷ்யாவால் போரில் போடப்பட்ட குண்டுகளை காட்டிலும் அமெரிக்கா உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ள கொத்து குண்டுகள் பாதுகாப்பானவை.

கிளஸ்டர் குண்டுகள் வெடித்தால் அதிலிருந்து பல குண்டுகள் காற்றில் சிதறி மீண்டும் வெடிக்கும். இது பல உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த குண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் “போதிய அளவு கிளஸ்டர் குண்டுகள் ரஷ்யாவிடம் கையிருப்பில் உள்ளது. கிளஸ்டர் குண்டுகளை ரஷ்ய படை வீரர்கள் மீது உக்ரைன் பயன்படுத்தினால் ரஷ்யாவுக்கும் அந்த குண்டுகளை பயன்படுத்த உரிமை உள்ளது” என தெரிவித்துள்ளார்.