ஆஸ்திரேலியாவின் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரில், பந்தை அடிக்காமல் விட முயன்றபோது அது சிக்ஸராக மாறிய வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெர்த் நகரின் புகழ்பெற்ற வக்கா (WACA) மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா அணிகள் மோதின. விக்டோரியா அணி நிர்ணயித்த 231 ரன்கள் இலக்கை நோக்கி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி விளையாடியது.
ஆட்டத்தின் முதல் ஓவரை விக்டோரியா வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் மெக்லூர் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட தொடக்க ஆட்டக்காரர் சாம் ஃபேன்னிங், அது விக்கெட்டை விட்டு வெளியே செல்லும் என நினைத்து அடிக்காமல் விட முயன்றார். ஆனால், பந்து மிடில் ஸ்டம்ப் லைனில் வந்தது. கடைசி நேரத்தில் பந்து பேட்டின் மேல் விளிம்பில் பட்டு, விக்கெட் கீப்பருக்கு மேலாகப் பறந்து எல்லைக் கோட்டைத் தாண்டி சிக்ஸராக மாறியது. பந்தை அடிக்கவே முயற்சிக்காத நிலையில் அது சிக்ஸரானதைக் கண்டு பந்துவீச்சாளரும், ரசிகர்களும் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர்.
இந்த ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜோயல் கர்டிஸ் 91 ரன்களும், கேமரூன் பான்கிராப்ட் ஆட்டமிழக்காமல் 70 ரன்களும் குவித்து வெற்றிக்கு உதவினர். வினோத சிக்ஸர் அடித்த சாம் ஃபேன்னிங் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
No way! Sam Fanning’s LEAVE goes for six! #OneDayCup pic.twitter.com/0rQW8EyOIg
— cricket.com.au (@cricketcomau) February 21, 2026
இந்த வெற்றியின் மூலம் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி 17 புள்ளிகளுடன் தொடரில் 4-வது இடத்தைப் பிடித்தது. அதே சமயம், ஆடிய 7 போட்டிகளில் 5-ல் தோல்வியடைந்த விக்டோரியா அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தது. மேலும் இந்தத் தொடரின் இறுதிப்போட்டி வரும் மார்ச் 11-ஆம் தேதி தாஸ்மேனியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையே பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
