சிஎஸ்கே வீரர் ராகுல் சஹர் தனது மனைவி இஷானி ஜோஹரை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு கோவாவில் மிக இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களது நான்கு ஆண்டு கால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பே அவசரமாகத் திருமண உறவில் இணைந்துவிட்டதாகவும், கடந்த 15 மாதங்களாக இது தொடர்பாக நீதிமன்றப் போராட்டங்களைச் சந்தித்ததாகவும் ராகுல் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை தான் கோபத்திலோ அல்லது வருத்தத்திலோ எடுக்கவில்லை என்றும், சில உறவுகள் நமக்கு பாடம் கற்பிக்கவே வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
26 வயதே ஆகும் ராகுல் சஹர், இந்த விவாகரத்தை ஒரு முடிவாகப் பார்க்காமல் தனக்கான ‘விடுதலை’யாகக் கருதுவதாகவும், இனி வரும் காலங்களில் சுயமரியாதையுடனும் அமைதியுடனும் தனது வாழ்க்கையைத் தொடர விரும்புவதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
நட்சத்திர கிரிக்கெட் வீரரின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
