வறுமை மற்றும் குடும்பச் சூழலால் ஒருவரது கனவு முடங்கிவிடக்கூடாது என்பதற்காக, தனது கிரிக்கெட் வாழ்க்கையையே தியாகம் செய்த அண்ணனின் உழைப்பால், இன்று ஐபிஎல் தொடரில் நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் வீரர் அசோக் சர்மா.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ராம்புரா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் சர்மா. இவருக்கும் இவரது அண்ணன் அக்ஷய்க்கும் சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம். இருவருமே மாவட்ட அளவிலான போட்டிகளில் முத்திரை பதிக்கும் அளவுக்குத் திறமைசாலிகளாகத் திகழ்ந்தனர்.
இருப்பினும், குடும்பத்தின் வறுமை இருவரின் கனவுக்கும் முட்டுக்கட்டையாக நின்றது. கிரிக்கெட் உபகரணங்கள் வாங்குவதற்கும், முறையான பயிற்சி பெறுவதற்கும் போதிய வசதி இல்லாததால், இருவரில் ஒருவர் மட்டுமே கிரிக்கெட்டைத் தொடர முடியும் என்ற இக்கட்டான நிலை உருவானது.
தம்பி அசோக் சர்மாவின் அபாரமான பந்துவீச்சுத் திறமையைக் கண்ட அண்ணன் அக்ஷய், ஒரு கடினமான முடிவை எடுத்தார். தம்பியின் எதிர்காலத்திற்காகத் தனது கிரிக்கெட் கனவைக் கைவிடத் துணிந்தார். தான் விளையாடுவதை நிறுத்திவிட்டு, தம்பிக்குத் தேவையான உதவிகளையும், பயிற்சிக்கான செலவுகளையும் கவனித்துக் கொள்ளத் தொடங்கினார். அண்ணனின் இந்தத் தியாகமே அசோக் சர்மாவின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
Ian Bishop on Ashok Sharma : “Ashok Sharma comes from Rampura, a small village in Jaipur. They are two brothers both played at district level but due to financial issues, only one could afford to play the game. His elder brother Akshay Sacrificed for his brother and today Ashok… pic.twitter.com/k8zzRGVCVY
— Rohit (@Iam_Rohit_G) March 31, 2026
அசோக் சர்மாவின் இந்த உருக்கமான பின்னணியை பிரபல வர்ணனையாளர் இயன் பிஷப் நேரலையில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ராம்புரா கிராமத்திலிருந்து வந்த அசோக் சர்மா, இன்று ஐபிஎல் மேடையில் ஜொலிப்பதைப் பார்க்கப் பெருமையாக உள்ளது. ஒருவருக்காக மற்றொருவர் செய்த தியாகம் இன்று வெற்றியைத் தேடித்தந்துள்ளதை எண்ணி அவரது குடும்பத்தினர் நிச்சயம் பெருமிதம் கொள்வார்கள் என்றார்.
அண்ணன் அக்ஷய் போட்ட விதை, இன்று அசோக் சர்மாவை குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக மாற்றியுள்ளது. மேலும் சாதாரண கிராமப்புறப் பின்னணியிலிருந்து வந்து, குடும்பத்தின் தியாகத்தால் ஐபிஎல் போன்ற சர்வதேசத் தரத்திலான தொடரில் கால்பதித்துள்ள அசோக் சர்மாவின் கதை, பல இளம் வீரர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.
