ஐபிஎல் 2026 தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்திய போதிலும், ஆட்டத்தின் முடிவில் ரவீந்திர ஜடேஜா செய்த நெகிழ்ச்சியான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குவஹாத்தியில் திங்கட்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தியது. சிஎஸ்கே நிர்ணயித்த இலக்கை எளிதாக எட்டிய ராஜஸ்தான், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ரவீந்திர ஜடேஜா, தனது முன்னாள் சக வீரரான சிஎஸ்கே-வின் கலீல் அகமதுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில், கலீல் அகமது அணிந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் இருந்த அந்த அணியின் சின்னத்தை (Logo) ஜடேஜா உணர்ச்சிவசப்பட்டு முத்தமிட்டார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “ஜடேஜா ராஜஸ்தான் ஜெர்சியில் இருந்தாலும், அவரது இதயம் இன்னும் சென்னைக்காகவே துடிக்கிறது” என ரசிகர்கள் உருக்கமாகப் பதிவிட்டு வருகின்றனர். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் முக்கியத் தூணாக விளங்கிய ஜடேஜா, அந்த அணியின் பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்துள்ளார். குறிப்பாக 2023 இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸர், பவுண்டரி அடித்து சிஎஸ்கே-விற்கு கோப்பையை வென்று தந்தார்.
🚨RAVINDRA JADEJA KISS CSK LOGO🚨
– Yesterday after match Jaddu kissed CSK logo on khaleel ahmad’s chest while having a conversation with khaleel. Jaddu still love and respect CSK🥺💛 pic.twitter.com/x4x3W1jKej
— Sam (@Cricsam01) March 31, 2026
வெற்றிக் கொண்டாட்டத்தின் போது தோனி அவரைத் தூக்கி அணைத்த தருணம் ஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தோனியால் நகைச்சுவையாக அழைக்கப்பட்ட ‘சர் ஜடேஜா’ என்ற பெயரே இன்று வரை அவரது அடையாளமாக உள்ளது.
2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி ஜடேஜாவைத் தக்கவைக்கவில்லை. 2025-ஆம் ஆண்டு வீரர் பரிமாற்ற ஒப்பந்தத்தின் (Trade) அடிப்படையில், சிஎஸ்கே தனது நட்சத்திர வீரர் ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸிற்கு வழங்கியது. பதிலுக்கு ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சென்னை அணியில் இணைந்தார். மேலும் உடலால் ராஜஸ்தான் வீரராக மைதானத்தில் நின்றாலும், மனதால் தான் இன்னும் ஒரு ‘சூப்பர் கிங்’ தான் என்பதை ஜடேஜா இந்தச் செயலின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.
