நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல், தனது ஓய்வு குறித்த உண்மையான காரணத்தை மறைத்த விவகாரம் தற்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம், விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் ஓய்வு பெறுவதாக அறிவித்த பிரேஸ்வெல், உண்மையில் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் போட்டியின் போது எடுக்கப்பட்ட சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட கொக்கைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு 2027 நவம்பர் வரை விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடையைத் தவிர்க்க முடியாத சூழலில்தான், அவர் காயத்தைக் காரணமாகக் காட்டி தனது 35-வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். செப்டம்பர் 2025-ல் அவர் கொக்கைன் உட்கொண்டதை அவரே ஒப்புக்கொண்ட நிலையில், இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நியூசிலாந்து அணிக்காக 28 டெஸ்ட், 21 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடி 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரு அனுபவ வீரர், போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கித் தனது கிரிக்கெட் வாழ்க்கையை இப்படி ஒரு கரும்புள்ளியுடன் முடித்துக்கொண்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.