நடிகரும் ரேசருமான அஜித் குமார் ஸ்பெயினில் சுற்றுப்பயணத்தின் போது, அவரை சந்தித்த ரசிகர்கள் விசில் அடித்து கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனால், சைகை மூலம் அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது.

தன்னுடைய ரசிகர்கள் தவறு செய்யும் போதெல்லாம் அவர்களை நேர்மையாக அறிவுறுத்தி வந்த அஜித்தின் இந்த அணுகுமுறை நெட்டிசன்களால் பாராட்டப்படுகிறது. இந்நிலையில், நடிகர் பார்த்திபன்  அஜித்தைப் பற்றிய தனது கருத்துகளை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் ஒருவர் பகிர்ந்ததையடுத்து, பார்த்திபனும் அதனை மீண்டும் பகிர்ந்து தனது பாராட்டை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், “அஜித் ரொம்ப தனித்துவமானவர். அவரின் முடிவெடுக்கும் திறன் தெளிவானது,” என கூறியிருந்தார். அதனை பகிர்ந்த பார்த்திபன் தனது பதிவில்,

“அஜித் குமார் சலனமே இல்லாத மனிதர். கவனம் சினிமாவிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மட்டுமே. பெரும் புகழும் ரசிகர் ஆதரவையும் அரசியல் மேடைக்கு பயன்படுத்தாதவர். தன்னை நேசிக்கும் ரசிகர்களின் பாதுகாப்பைப் பற்றி அக்கறை கொண்டவர். புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கே வராமல், தன் உலகத்தில் அமைதியாக வாழும் ஞானி மனநிலை கொண்டவர். அவர் ஆச்சர்யமான அபூர்வப் பிறவி; எல்லோருக்கும் நல்ல நண்பர் — எனக்கும்!” என்று எழுதியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதே சமயம், நடிகர் விஜய் தனது ரசிகர்கள் வழியாக அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பார்த்திபனின் இந்த பதிவு, மறைமுகமாக விஜயை குறித்ததாக இருப்பதாக சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.