லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது ஒரு சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது. லக்னோ அணியின் இளம் வீரரான பிரின்ஸ் யாதவ், போட்டியின் அன்று காலையில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.

மேலும் அதில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் இணைந்து 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதே தனது லட்சியம் என்று உருக்கமாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அதே நாள் மாலை நடைபெற்ற போட்டியில், தனது முதல் ஓவரிலேயே விராட் கோலியை ‘கிளீன் போல்ட்’ செய்து அதிர்ச்சியளித்தார்.

“>

இதனால் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி ஐபிஎல் போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறியது அவரது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பிரின்ஸ் யாதவ் வீசிய பந்தை கணிக்கத் தவறிய கோலி, ஸ்டம்புகள் சிதறியதும் சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

இந்நிலையில் காலையில் தனது முன்மாதிரியாகக் கருதிய வீரருடன் விளையாட ஆசைப்பட்ட அதே இளம் வீரர், மாலையில் அந்த ஜாம்பவானின் விக்கெட்டை வீழ்த்தி கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஒரு கசப்பான அதிர்ச்சியை அளித்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.