பிரபல பேஷன் நிறுவனமான ஷானெல், தற்போது ‘வெறுங்கால் காலணிகள்’ என்ற விசித்திரமான வடிவமைப்பை அறிமுகம் செய்து இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்தக் காலணி பார்ப்பதற்கு வெறும் குதிங்கால் பகுதியை மட்டும் மூடி, காலின் விரல்களை முழுமையாக வெளியில் காட்டும் வகையில் ஒரு பட்டையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது காலணியே இல்லை, வெறும் குதிங்கால் பட்டை தான்” என்று கிண்டல் செய்து வருகின்றனர். பேஷன் உலகில் பல புதுமைகள் வந்தாலும், இந்த நடைமுறைக்கு ஒவ்வாத வடிவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த விசித்திரமான காலணிக்கு ஷானெல் நிறுவனம் நிர்ணயித்துள்ள விலைதான் எல்லோரையும் அதிர வைத்துள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்னும் பட்டியலிடப்படவில்லை என்றாலும், இதன் விலை சுமார் ரூ. 25,000 முதல் ரூ. 90,000 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவ்வளவு அதிக விலை கொடுத்து இதை யாராவது வாங்குவார்களா என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், சிலர் இது அந்த நிறுவனத்தின் ஒரு வித்தியாசமான விளம்பர உத்தி என்றும் பாராட்டி வருகின்றனர். எது எப்படியோ, இந்த ஷானெல் காலணி தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
