தமிழக வெற்றிக் கழகத்தின் எந்த ஒரு மாநாடு அல்லது நிர்வாகிகள் கூட்டம் நடந்தாலும், அங்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ஸ்கூட்டியுடன் ஆஜராகிவிடுகிறார். சொகுசு கார்களைத் தவிர்த்துவிட்டு, மிகச் சாதாரண மனிதரைப் போல ஸ்கூட்டியில் ஏறி அவர் கூட்ட நெரிசலுக்குள் புகுந்து செல்வது இப்போது அக்கட்சியின் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது. “அப்படி எங்குதான் சார் போவீங்க?” என்று கேட்கும் அளவிற்கு, ஒரு நிமிடம் கூட ஓரிடத்தில் நிற்காமல் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதும், நிர்வாகிகளைச் சந்திப்பதுமாக அவர் ஸ்கூட்டியிலேயே சுழன்று வருகிறார்.

​விஜய்யின் வாகனம் வரும் பாதையைச் சரிசெய்வது முதல், கடைக்கோடித் தொண்டன் வரை சென்று தகவல்களைச் சேர்ப்பது வரை அனைத்துக்கும் அவருக்கு இந்த ஸ்கூட்டிதான் உற்ற நண்பனாக இருக்கிறது. கார் செல்ல முடியாத குறுகிய சந்துகளிலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களிலும் மின்னல் வேகத்தில் ஸ்கூட்டியில் சென்று பணிகளை முடிக்கிறார். புஸ்ஸி ஆனந்தின் இந்த ஓயாத ஸ்கூட்டி பயணம், அவர் கட்சிப் பணிகளில் காட்டும் தீவிரத்தையும் வேகத்தையும் காட்டுவதாக சமூக வலைதளங்களில் பலராலும் பேசப்பட்டு வருகிறது.