உத்தரப் பிரதேச மாநிலத்தில், காரில் வந்த மர்ம நபர்கள் போலீசாருக்கே சவால் விடும் வகையில் இரும்புப் பெட்டி ஒன்றைப் புதரில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாக்கியா கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வயல்களில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, கான்பூர் திசையிலிருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென மேம்பாலத்தின் அருகே நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய நபர்கள், கயிற்றால் கட்டப்பட்ட கனமான இரும்புப் பெட்டியைச் சாலையோரப் புதரில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

சந்தேகமடைந்த கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது ரத்தம் தோய்ந்த நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அந்தப் பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் பெட்டியில் அடைக்கப்பட்டது உறுதியான நிலையில், தற்போது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஏஎஸ்பி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளிகள் அந்தப் பெண்ணை வேறு எங்கோ கொலை செய்துவிட்டு, சடலத்தை அப்புறப்படுத்த இந்த நெடுஞ்சாலையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

“>

குறிப்பாக, கடந்த ஆண்டு இதே பகுதியில் டிரெய்லர் ஓட்டுநர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்த விபரீதம் நடந்துள்ளது. கோக்ராஜ் காவல் நிலையப் பகுதியில் நெடுஞ்சாலை இரண்டாகப் பிரிவதால், குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கு வசதியாக இந்தப் பாதையைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

தற்போது சுங்கச்சாவடிகள் மற்றும் நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொலையுண்ட பெண் யார்? மற்றும் அந்தக் காரில் வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.