அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ‘பைத்தியக்காரன்’ என்று விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஹிமாந்தா பிஸ்வாவின் மனைவி வெளிநாடுகளில் சொத்துக்கள் மற்றும் பாஸ்போர்ட் வைத்திருப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கார்கே வலியுறுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய முதல்வர் சர்மா, கார்கேவுக்கு வயதாகிவிட்டதாகவும் அவர் ஒரு பைத்தியக்காரனைப் போலப் பேசுவதாகவும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மூத்தத் தலைவரை இழிவுபடுத்துவது ஒட்டுமொத்த தலித் மற்றும் பழங்குடியின மக்களையும் அவமதிப்பதற்குச் சமம் என்று சாடியுள்ளார்.
இந்நிலையில் தலித் தலைவர்கள் உண்மையை உரக்கப் பேசும்போதெல்லாம் அவர்களை இழிவுபடுத்துவதே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் சித்தாந்தம் என்று ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு அவர் உடன்படுவதையே காட்டுகிறது என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
