தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் தும்மன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி சித்தாரெட்டி என்பவரது மனைவி கவிதா, முகநூல் வாயிலாக பவன்குமார் ரெட்டி என்பவருடன் பழகி, அது கள்ளக்காதலாக மாறியது. இதன் காரணமாக கவிதா தனது கணவன் மற்றும் இரு குழந்தைகளைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழச் சென்றார்.

மேலும் மனைவியைக் காணவில்லை என சித்தாரெட்டி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணையில் கவிதா ஜட்செர்லாவில் இருப்பதை கண்டுபிடித்தனர். போலீஸ்காரர் ஒருவரின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கவிதா தனது கணவருடன் வாழ மறுத்து, கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என பிடிவாதமாக இருந்து கணவரைத் திட்டியுள்ளார்.

இதனால் போலீசாரின் நீண்ட சமரசத்திற்குப் பிறகு, கவிதா கணவருடன் வர சம்மதித்து அனைவரும் காரில் ஊர் திரும்பினர். அப்போது வழியில் ஒரு கடையில் காரை நிறுத்தியபோது, ஆத்திரத்தில் இருந்த சித்தாரெட்டி ரகசியமாக ஒரு கத்தியை வாங்கி மறைத்து வைத்துக் கொண்டார்.

இந்நிலையில் மீண்டும் பயணம் தொடர்ந்தபோது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காரிலேயே கவிதாவின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த கவிதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தனது மனைவியின் பிடிவாதத்தால் ஆத்திரமடைந்த கணவர் செய்த இந்த விபரீத கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.