தந்தையின் கவனக்குறைவால் பத்து மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. 

10 மாத குழந்தையை தந்தை காரில் விட்டு சென்றுள்ளார். 7 மணி நேரம் கழித்து, குழந்தை இறந்தது. இதை அறிந்த குழந்தையின் தாய் சோகத்தில் மூழ்கினார். போர்ச்சுகலில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. விரிவுரையாளரான ஒருவர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 12ஆம் தேதி) குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் உள்ள நர்சரியில் குழந்தையை இறக்கி விட மறந்து விட்டார். நோவா யுனிவர்சிட்டி வளாகத்தை அடைந்ததும் காரை நிறுத்திவிட்டு கதவுகளைப் பூட்டினார். அலுவலகம் சென்றதும் மாணவர்களுக்கு விரிவுரை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டார்.

இருப்பினும், 7 மணி நேரம் கழித்து அந்த நபர் தனது காரிற்கு திரும்பினார். காரின் கதவைத் திறந்து பார்த்தபோது, ​​பின் இருக்கையில் மயங்கிய நிலையில் தனது 10 மாத மகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவசர சேவைக்கு போன் செய்தார். அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள், குழந்தை இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

மறுபுறம், இதை அறிந்த தாய், உடனடியாக அங்கு சென்றடைந்தார். குழந்தை இறந்து கிடப்பதைப் பார்த்து, அதிர்ச்சியில் சுருண்டு விழுந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.  பின் இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தந்தை மறந்துவிட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். கடும் வெயிலின் தாக்கத்தால் குழந்தை இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது, அந்த நபர் வேலைக்குச் செல்வதற்கு முன் தனது குழந்தையை நர்சரியில் இறக்கிவிட வேண்டும். ஆனால், தவறுதலாக மகளை காரில் ஏற்றிவிட்டு நேரடியாக அலுவலகத்துக்குச் சென்றார். சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியின் வெப்பநிலை சுமார் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது, அதாவது பூட்டிய காருக்குள் வெப்பநிலை இருமடங்காக அதிகரித்திருக்கும். இதன் காரணமாக குழந்தை பரிதாபமாக இறந்தது.