மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், பூட்டப்பட்ட காரினுள்ளே சுமார் 3 மணி நேரம் சிக்கியிருந்த 4 வயது சிறுமி, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் பகுதியில் உள்ள நந்தன்வன் காலனியைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் நூர் என்பவரின் 4 வயது மகள் ஹஜ்ரா. நேற்று முன்தினம் மதியம், சிறுமி ஹஜ்ரா தனது தாத்தா, பாட்டி மற்றும் குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளுடன் குடும்ப காரில் வெளியே சென்றுள்ளார். காரில் பயணம் செய்தபோதே அச்சிறுமி பின் இருக்கையில் அசந்து தூங்கியதாகக் கூறப்படுகிறது.

மதியம் 12 மணியளவில் கார் வீடு திரும்பியதும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஆனால், சிறுமி ஹஜ்ரா காரின் பின் இருக்கையில் தூங்குவதை யாரும் கவனிக்கவில்லை. வழக்கமாக அச்சிறுமி வீட்டின் ஏதாவது ஒரு அறையில் தூங்கும் வழக்கம் கொண்டவர் என்பதால், வீட்டிற்குள் எங்காவது தூங்கிக் கொண்டிருப்பாள் என குடும்பத்தினர் நினைத்துள்ளனர்.

நீண்ட நேரமாகியும் சிறுமியைக் காணாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், வீட்டின் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். எங்கும் கிடைக்காததால், இறுதியாக வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரைத் திறந்து பார்த்தபோது, சிறுமி ஹஜ்ரா மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மதியம் 3 மணியளவில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை, குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், இந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பூட்டப்பட்ட காரின் உள்ளே கடுமையான வெப்பம் நிலவியதாலும், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாலும் சிறுமி மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. எனினும், உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் 3 குழந்தைகளில் இரண்டாவது மகளான 4 வயது சிறுமி ஹஜ்ராவின் இந்தத் துயர மரணம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பெற்றோர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.