இன்றைய இணையதள உலகில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் திருமணங்கள் நடப்பது அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் இன்றும் விசித்திரமான ஒரு ‘திருமணச் சந்தை’ செயல்பட்டு வருகிறது.
இந்தச் சந்தையின் சிறப்பு என்னவென்றால், இங்கு மணமகன் அல்லது மணமகள் நேரில் வருவதில்லை; மாறாக, அவர்களுடைய பெற்றோர், தாத்தா-பாட்டி அல்லது உறவினர்களே திரளாகக் கூடுகிறார்கள்.
அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற வரனைத் தேடி, ஒரு பொது இடத்தில் சந்தை போலக் கூடி வரன் தேடும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்தத் திருமணச் சந்தையில் பெற்றோர் பெரிய குடைகளை ஏந்தியபடி அமர்ந்திருக்கிறார்கள். காய்கறிச் சந்தையில் விலைப்பட்டியல் வைத்திருப்பது போல, தங்கள் பிள்ளைகளின் வயது, வேலை, கல்வி மற்றும் சொத்து விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவைக் குடையின் மீதோ அல்லது தரையிலோ ஒட்டி வைக்கின்றனர்.
அங்கு வரும் மற்ற பெற்றோர்களுக்கு அந்தத் தகவல் பிடித்துப் போனால், அதன் பிறகு இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்தை முடிவு செய்கிறார்கள். கால மாற்றத்திலும் மாறாத இந்தச் சீன பாரம்பரியம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
