டி20 உலகக் கோப்பை (2026) சூப்பர்-8 சுற்றின் மிக முக்கியமான போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கம்பீரமாக அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் நாயகனாகத் திகழ்ந்த சஞ்சு சாம்சன், தனது கிரிக்கெட் பயணம் குறித்துப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த சஞ்சு சாம்சன், 50 பந்துகளில் 97 ரன்கள் (12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

ஆட்டநாயகன் விருது வென்ற பின் பேசிய சஞ்சு சாம்சன் கூறியதாவது, “இந்தத் தருணம் எனக்கு உலகையே வென்றது போன்ற உணர்வைத் தருகிறது. கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாள் முதல், நாட்டுக்காக இத்தகைய இக்கட்டான சூழலில் விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த ஒரு நாளுக்காகவே இத்தனை காலம் காத்திருந்தேன்.

தனது நீண்டகால காத்திருப்பு குறித்துப் பேசிய அவர், “எனது பயணம் எளிதானதாக இருக்கவில்லை. பல ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளேன். சுமார் 10-12 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரிலும், கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியுடனும் பயணித்து வருகிறேன். பல போட்டிகளில் களத்தில் விளையாடுவதை விட, பெவிலியனில் அமர்ந்து வேடிக்கை பார்த்த நாட்களே அதிகம்.

ஆனால், அந்த நேரத்தை நான் வீணடிக்கவில்லை. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் ஒரு போட்டியை எப்படி முடித்து வைக்கிறார்கள் என்பதைப் பார்த்துப் பழகினேன். நான் 50-60 போட்டிகளில் விளையாடியிருந்தாலும், பெவிலியனில் அமர்ந்து சுமார் 100 போட்டிகளைக் கவனித்துக் கற்ற அனுபவமே இன்று எனக்குக் கை கொடுத்தது,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

போட்டியின் சூழல் குறித்துப் பேசிய அவர், “முந்தைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்தோம், அது வேறு விதம். ஆனால் இன்று இலக்கைத் துரத்தும்போது விக்கெட்டுகள் சரிந்தன. அதனால் அதிரடியைக் குறைத்துக்கொண்டு, பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் செலுத்தினேன். ஒவ்வொரு பந்தையும் அதன் தகுதிக்கு ஏற்ப விளையாடினேன். இவ்வளவு சிறப்பான இன்னிங்ஸை ஆடுவேன் என்று நினைக்கவில்லை, ஆனால் என் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது,” என்றார்.

சஞ்சு சாம்சனின் இந்த முதிர்ச்சியான ஆட்டமும், அவரது உருக்கமான பேச்சும் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இதே உத்வேகத்துடன் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.