மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான வாழ்வா-சாவா போராட்டத்தில், தொடக்க வீரர் சஞ்சு சாம்சனின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயித்த 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். 50 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 97 ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.

இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரர் ஒருவரால் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற பெருமையை சாம்சன் பெற்றார். இதற்கு முன்னதாக 2010-ல் சுரேஷ் ரெய்னா அடித்த 101 ரன்களே முதலிடத்தில் உள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சேஸிங்கின் போது அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் சஞ்சு சம்சனை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, இது காலிறுதிக்கு இணையான அழுத்தமான போட்டி. கடின உழைப்போடு வாய்ப்புக்காக அமைதியாகக் காத்திருக்கும் நல்லவர்களுக்கு, ஒருநாள் நல்ல பலன் கிடைக்கும் என்பதற்கு சஞ்சு சாம்சனே சாட்சி. தற்போதைய பேட்டிங் வரிசை வலுவாக இருப்பதால், இதில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை,” எனத் தெரிவித்தார்.

சஞ்சு சாம்சனின் இந்த விஸ்வரூபம், மற்ற வீரர்களுக்கு கடும் போட்டியை உருவாக்கியுள்ளது. நியூசிலாந்து தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இஷான் கிஷன், நடப்பு உலகக் கோப்பையில் தவறி வருகிறார். இதனால், தனது இடத்தைத் தக்கவைக்க அவர் திலக் வர்மாவுடன் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. திலக் வர்மா சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில், இஷான் கிஷன் ‘பேக்கப் விக்கெட் கீப்பராக’ மட்டுமே அணியில் தொடர வாய்ப்புள்ளது.

இந்திய அணியில் சீனியர் வீரர்களின் எதிர்காலம் குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன. 35 வயதாகும் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முன்பு போல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால், 2026 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் ஓய்வு பெறக்கூடும் அல்லது அணியிலிருந்து ஓரங்கட்டப்படலாம் எனக் கருதப்படுகிறது. அதேபோல், ரிங்கு சிங் ஆகியோருக்கும் உலகக் கோப்பைக்கு பிந்தைய தொடர்களில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன