இலங்கையில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி தனது அனைத்துப் போட்டிகளிலும் விளையாடியும் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளது. குறிப்பாக, முக்கியமான போட்டியில் இலங்கையை 147 ரன்களுக்குள் கட்டுப்படுத்த தவறியதே அவர்களின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த நான்கு ஐசிசி தொடர்களாகவே பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பைத் தவறவிட்டு வருவது அந்த நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் சல்மான் ஆகா, நெருக்கடியான சூழலில் அணி எடுக்கும் தவறான முடிவுகளே தோல்விக்கு முக்கிய காரணம் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
ஐசிசி தொடர்களில் ஒவ்வொரு போட்டியும் வாழ்வா-சாவா என்ற நிலையிலேயே இருக்கும் என்பதால், பதற்றமான தருணங்களில் பேட்ஸ்மேன்கள் மிகவும் பொறுப்புடனும், சரியான முடிவுகளை எடுத்தும் விளையாட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் இத்தகைய சூழல்களைக் கையாளும் திறனை வீரர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
