டி20 உலகக் கோப்பைத் தொடரின் 52-வது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, கம்பீரமாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியின் நாயகன் சஞ்சு சாம்சன் வெற்றியைத் தனது பாணியில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ரோஸ்டன் சேஸ் (40), ஜேசன் ஹோல்டர் (37*), ரோவ்மன் பாவெல் (34*) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.

196 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 19.2 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரராகக் களமிறங்கி 97 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இப்போட்டியில் அரைசதம் கடந்தவுடன் சஞ்சு சாம்சன் மைதானத்திலேயே சிலுவை அடையாளம் காட்டி இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல், வெற்றிக்கான கடைசி ரன்னை எடுத்தவுடன் தரையில் அமர்ந்து கண்களை மூடி சிலுவை பிரார்த்தனை செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சஞ்சு சாம்சனின் இந்த எமோஷனல் கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக, மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், “இந்த வெற்றிக்கு இயேசுவே காரணம், அவர் என்னை வழிநடத்தினார்” என்று கூறியிருந்தார். அப்போது அவரது மதத்தைக் குறிப்பிட்டு இணையத்தில் பலதரப்பட்ட விமர்சனங்களும் ட்ரோல்களும் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சஞ்சு சாம்சனும் தனது வெற்றியைத் தனது மத நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தையும், அதே சமயம் ஆதரவையும் பெற்றுள்ளது. விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள் களத்தில் வெளிப்படுவது இது முதல்முறை அல்ல என்றாலும், சஞ்சுவின் இந்தச் செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.