தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தந்தூர் நகரத்துக்கு உட்பட்ட சாய்புரி பகுதியில், வரதட்சணை கேட்டு கணவர் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதல் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகளில், அனுஷா (20) என்ற இளம்பெண் தனது வீட்டின் முன்புறம் உள்ள உயரமான மேடையில் அமர்ந்திருப்பதும், அப்போது அவரது கணவர் பரமேஷ் அவரை வீட்டிற்குள் செல்லுமாறு கட்டளையிடுவதும் பதிவாகியுள்ளது. அதனை அவர் மறுத்ததைத் தொடர்ந்து, பரமேஷ் அனுஷாவை அறைந்து, தலையை சுவரில் மோதி, உதைத்து, பின்னர் தடிமனான மரக்குச்சியால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் அனுஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அனுஷா பல மாதங்களாக காதலித்து வந்த பின்னர், டிராக்டர் ஓட்டுநராக பணிபுரியும் பரமேஷை கடந்த மார்ச் 12-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
திருமணமான மூன்று மாதங்களிலேயே, பரமேஷ் வரதட்சணை மற்றும் தங்க நகைகள் கேட்டு அனுஷாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், இதில் அவரது பெற்றோரும் ஆதரவாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சம்பவ நாளன்று, மகள் மீண்டும் தாக்கப்பட்டதை அறிந்த அனுஷாவின் தாய் சந்திரம்மா, கரனோகோட்டாவிலிருந்து வந்து மகளை அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் பரமேஷ் அவர்களை வழிமறித்து அனுஷாவை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு மரக்குச்சியால் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அனுஷாவை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு பரமேஷும் அவரது பெற்றோரும் தலைமறைவாகியுள்ளனர். அனுஷாவின் தாய் சந்திரம்மா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக துணைக் காவல் கண்காணிப்பாளர் நர்சிங் யாதையா தெரிவித்தார். மேலும் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
