உண்மையான காதலுக்கு இனமும், எல்லைகளும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் ஒரு நெகிழ்வூட்டும் காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அன்னப்பறவையொன்று, தன் உயிரிழந்த துணையை மீண்டும் உயிரோடு கொண்டு வர முயற்சிக்கும் இந்த வீடியோ, பார்வையாளர்களின் மனதை நெகிழ வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இக்காணொளியில், ஒரு குளத்தின் அருகே தனது உயிரிழந்த துணையின் அருகில் அமர்ந்துள்ள ஆண் ஸ்வானை காணலாம். தனது துணை உயிரிழந்ததைக் கண்டு நம்ப முடியாமல் தவிக்கும் அந்தப் பறவை, தனது அலகால் மெல்ல மெல்ல தொட்டு எழுப்ப முயற்சிக்கிறது. மீண்டும் தண்ணீரில் ஒன்றாகச் சேரும் நம்பிக்கையோடு, பலமுறை முயற்சி செய்வது காணப்படுகிறது.

இந்த வீடியோவை முன்னாள் வனத்துறை அதிகாரி சுசாந்த நந்தா (@susantananda3) தனது X (முன்னர் ட்விட்டர்) கணக்கில் பகிர்ந்ததிலிருந்து, அது விரைவாக வைரலாகியுள்ளது. “அது ஒரு பறவை மட்டுமல்ல; உண்மையான தோழனின் கடைசி முயற்சி” என நெட்டிசன்கள் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

நிபுணர்களின் கூற்றுப்படி, ஸ்வான்கள் (அன்னப்பறவைகள்) தங்கள் வாழ்க்கைத்துணையை ஒருமுறை தேர்ந்தெடுத்தவுடன், அவ்வுறவு வாழ்நாள் முழுவதும் தொடரும். ஒரு துணையை இழக்கின்ற சமயத்தில், அவர்கள் பெரும் மனவேதனைக்குள்ளாகின்றனர் என்பது பல நிகழ்வுகளாலும் உறுதியாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

ஒரு நெட்டிசன் கூறுகிறார்: “இதயத்தை உருக்கும் காட்சி… அடுத்த பிறவியில் மீண்டும் ஒன்று சேர கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.”

மற்றொருவர்: “ஒவ்வொரு உயிரினத்துக்கும் பிரிவின் வலி ஒரே மாதிரியானது” என உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.