ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரபல மாடல் மற்றும் அழகுக்கலை நிபுணரான ஸ்டெபானி பைபர் கடந்த மாதம் 23-ந் தேதி மர்மமாக காணாமல் போனார். சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்ட அவர் மாயமானதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை ஆரம்பித்தனர்.
விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவரது முன்னாள் காதலன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டார். அப்போது, காதல் முறிந்தது தொடர்பாக ஏற்பட்ட ஆத்திரத்தில் ஸ்டெபானியை கழுத்தை நெரித்து கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், ஸ்லோவேனியா எல்லை அருகே ஸ்டெபானியின் உடலை ஒரு சூட்கேஸில் வைத்து புதைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவர் தெரிவித்த தகவல்களின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூட்கேஸில் இருந்த உடலை தோண்டி எடுத்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இந்தக் கொலைக்கு சகோதரன் மற்றும் தந்தையும் உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
