வனவிலங்குகளின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சாகசம் செய்ய முயல்வது எவ்வளவு பெரிய விபரீதம் என்பதை உணர்த்தும் மிரளவைக்கும் சம்பவம் ஒன்று குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.
குஜராத்தின் அம்ரேலி பகுதியில் மூன்று இளைஞர்கள் ஆபத்தை உணராமல் காட்டுப் பகுதிக்குள் உலா சென்றுள்ளனர். அப்போது அங்கு காடுகளின் ராஜாவான சிங்கங்கள் ஜோடியாக இனச்சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளன.
இதனைத் தூரத்திலிருந்து பார்க்காமல், அந்த வாலிபர்கள் சிங்கங்களின் மிக அருகில் சென்று வேடிக்கை பார்க்க ஆசைப்பட்டுள்ளனர். தங்களின் தனிமையில் ‘டிஸ்டர்ப்’ செய்ததால் கடும் கோபமடைந்த சிங்கங்கள், அந்த இளைஞர்களை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து வந்து திடீர் தாக்குதல் நடத்தின.
இந்த கொடூர வேட்டையில், 21 வயதே ஆன சோஹ்றில் மெமன் என்ற வாலிபர் சிங்கங்களின் நகங்களிலும் பற்களிலும் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், அங்கிருந்த சிங்கங்களுடன் நீண்ட நேரம் போராடி, அவற்றை அதிரடியாக விரட்டியடித்தனர்.
அதன் பின்னரே சிங்கங்களிடம் சிக்கியிருந்த அந்த இளைஞனின் உடலை அவர்களால் மீட்க முடிந்தது. இந்த அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், வனப்பகுதிகளுக்குள் அத்துமீறக் கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
