ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த நவம்பர் 2022-ல் ‘நிவா பூபா’ நிறுவனத்திடம் இருந்து ₹5 லட்சம் மதிப்பிலான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்தார். இந்த பாலிசி அவருக்கும், அவரது மனைவி மற்றும் மகள்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக இருந்தது.

இதனால் துரதிர்ஷ்டவசமாக, பாலிசி காலத்தின் போது அவரது மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக சுமார் ₹5 லட்சம் வரை அவர் சொந்தப் பணத்தைச் செலவு செய்தார்.

ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பணத்தை திரும்பக் கேட்கும்போது, “பாலிசி எடுப்பதற்கு முன்பே அவரது மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருந்தது இந்த உண்மையை மறைத்துதான் அவர்கள் இன்சூரன்ஸ் எடுத்துள்ளனர்” என்று கூறி நிறுவனம் அந்த க்ளைமை நிராகரித்தது.

மேலும் இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட நபர் சோலன் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், “பாலிசிதாரரின் மனைவிக்கு ஏற்கனவே நோய் இருந்தது என்பதற்கான எந்தவொரு தகுந்த ஆதாரத்தையோ அல்லது தனிப்பட்ட விசாரணை அறிக்கையையோ இன்சூரன்ஸ் நிறுவனம் சமர்ப்பிக்கத் தவறிவிட்டது” என்று சுட்டிக்காட்டியது.

இதனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவச் சிகிச்சைக்கான தொகையான ₹80,439-ஐ 9 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. மேலும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கான இழப்பீடாக ₹30,000 மற்றும் நீதிமன்ற வழக்குச் செலவாக ₹20,000 என மொத்தம் ₹1.3 லட்சத்திற்கும் அதிகமான தொகையை 30 நாட்களுக்குள் பாலிசிதாரருக்கு வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.