பிரபல நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ வெங்கட் ராஜ் (68) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்காதது குறித்து நடிகர் காதல் சுகுமார் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கட் ராஜ். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் சந்தானத்துடன் இணைந்து ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘டிக்கிலோனா’ மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் ‘மனிதன்’, சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட பல படங்களில் தனது எதார்த்தமான நகைச்சுவையால் முத்திரை பதித்தவர்.
வெங்கட் ராஜின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ஊடகங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி நடிகர் காதல் சுகுமார் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
“ஒரு நடிகனாக இருந்தாலும் கூட, கைநிறையப் பணம் சேர்த்து வைத்திருந்தால் மட்டுமே ஒருவரது மரணம் செய்தியாக மாறுகிறது. 30 ஆண்டுகாலமாகத் திரையுலகில் உழைத்த இந்த மனிதர், வறுமையிலேயே வாழ்ந்து மறைந்துள்ளார். ஊடகங்கள் இவரை எட்டிப்பார்க்கவில்லை; அதற்காவது பரவாயில்லை, இவருடன் பயணித்து இன்று பெரிய நிலைக்கு வந்த நடிகர்கள் கூட நேரில் வரவில்லை. இதான் யதார்த்தம் போலிருக்கிறது. எல்லாரையும் சிரிக்க வைத்தவரின் மரணத்தில், அழுவதற்கு கூட ஆளில்லை என்பதுதான் வேதனை.”
View this post on Instagram
‘லொள்ளு சபா’ மூலம் அறிமுகமான நடிகர் சந்தானம் உள்ளிட்ட பலர் இன்று சினிமாவில் பிஸியான நடிகர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் படப்பிடிப்பு மற்றும் இதர வேலைகளில் இருந்ததால் நேரில் வர முடியவில்லை எனக் கூறப்பட்டாலும், சக கலைஞனின் மறைவுக்குக் குறைந்தபட்சம் இரங்கல் கூடத் தெரிவிக்காதது ஏன் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபகாலமாகத் திரைத்துறையில் மூத்த கலைஞர்கள் மறையும்போது, உடன் நடித்தவர்கள் இறுதிச் சடங்கிற்கு வராமல் தவிர்ப்பது அதிகரித்து வருவதாக வேதனை எழுந்துள்ளது. திரைப்பயணத்தில் உடன் இருந்தவர்கள், குறைந்தபட்சம் மறைந்த நடிகரின் குடும்பத்தினருக்காவது ஆறுதல் கூற முன்வர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகஉள்ளது.
