பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார், குழந்தைகள் பெற்றுக்கொள்வது மற்றும் குடும்பப் பொருளாதாரத் திட்டமிடல் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். தற்போது அவர் ‘சரஸ்வதி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் அவர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வரலட்சுமி, இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் வளர்ப்பு குறித்துப் பேசுகையில்,
“போதிய பணவசதி இல்லாமல் எதற்காகக் குழந்தைகள் பெற்றுக்கொள்கிறீர்கள்? முதலில் உங்களது நிதி ஆதாரத்தைத் திட்டமிடுங்கள், அதன் பிறகு குழந்தை பற்றி யோசியுங்கள். குழந்தையைப் பெற்றுக்கொள்வது எளிது, ஆனால் அவர்களைப் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் முக்கியம். இன்றைய பொருளாதாரச் சூழலை யாராலும் கணிக்க முடியாது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திட்டமிடல் இல்லாததால் ஏற்படும் விளைவுகள் குறித்து வேதனை தெரிவித்தார். “பலர் குழந்தையைப் பெற்றுக்கொண்டு கஷ்டப்படுகிறோம் என நொந்துகொள்கிறார்கள். இறுதியில் அந்தக் குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைக்கும் நிலைக்குத் தள்ளுகிறார்கள். நான் குழந்தைகளுக்கு எதிரானவள் அல்ல; அதேசமயம் யோசிக்காமல் செய்யும் இத்தகைய செயல்களுக்கு ஆதரவும் தரமாட்டேன்.
திருமணத்திற்குப் பிறகு போதிய நிதி ஆதாரத்தைச் சேர்த்துவிட்டு, கையில் பணம் இருந்தால் மட்டும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள். அந்தக் குழந்தைகளுக்காக யாரிடமும் போய் உதவி கேட்கும் நிலையை உருவாக்காதீர்கள். என்னிடம் வேலை செய்பவர்களிடமும், நெருக்கமானவர்களிடமும் நான் இதையேதான் வலியுறுத்துகிறேன் என வரலட்சுமி பேசினார்.
