கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் பாலக்காடு எம்எல்ஏவும், மாநில இளைஞரணி தலைவருமான ராகுல் மம்கூட்டத் மீது மலையாள நடிகை ரினி அன் ஜார்ஜ் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு இளம் தலைவர் தனக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதுடன், ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும், இதை கட்சி தலைமைக்கு தெரிவித்தபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், அந்த தலைவரால் கட்சியின் முக்கிய தலைவர்களின் மனைவிகள் மற்றும் மகள்களும் இதேபோன்ற தொந்தரவுகளை எதிர்கொண்டதாகவும், ஆனால் அவரை பெயர் குறிப்பிடாமல் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, எழுத்தாளர் ஹனி பாஸ்கரன், ராகுல் மம்கூட்டத் மீது நேரடியாக பாலியல் புகார் அளித்து, அவர் பல பெண்களுக்கு ஒரே மாதிரியான ஆபாச செய்திகளை அனுப்பியதாகவும், கட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளால் கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக மற்றும் சிபிஐ(எம்)-இன் இளைஞர் அமைப்பான டிஒய்எஃப்ஐ ஆகியவை பாலக்காட்டில் ராகுலின் அலுவலகத்தை நோக்கி போராட்டம் நடத்தி, அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி.சதீசன், ஒரு புகார் மட்டுமே கட்சிக்கு வந்துள்ளதாகவும், அது தீவிரமாக விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த புகார்களை அடுத்து, ராகுல் மம்கூட்டத் இளைஞரணி மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார், ஆனால் தான் எவ்வித தவறும் செய்யவில்லை என்றும், இந்த புகார்களை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் கூறி, தனது தரப்பை வலியுறுத்தினார்.
