தேர்தலுக்கு முன்பாகவே தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்திருந்தால், காங்கிரஸுக்கு துணை முதலமைச்சர் (DCM) பதவியே கிடைத்திருக்கும் என்று அமைச்சர் விஸ்வநாதன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ஆவேசமாகப் பேசிய அவர், தவெகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் காங்கிரஸுக்குக் குறைந்தது 10 அமைச்சர் பதவிகளும், 70 சட்டமன்ற உறுப்பினர் (MLA) இடங்களும் கிடைத்திருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

ஆனால், கட்சிக்குள்ளேயே இருக்கும் சில ‘குள்ளநரிகள்’ சுயநலத்தோடு செயல்பட்டு, அந்தப் பொன்னான வாய்ப்புக் கிடைக்க விடாமல் திட்டமிட்டு குழி பறித்துவிட்டதாகத் தனது சொந்தக் கட்சியினரையே மேடையில் கடுமையாகச் சாடியுள்ளார். ​அமைச்சர் விஸ்வநாதனின் இந்த அதிரடிப் பேச்சு, ஒருவேளை தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்து துணை முதலமைச்சர் பதவி கிடைத்திருந்தால் அந்த நாற்காலியில் யார் அமர்ந்திருப்பார் என்ற மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அரசியல் நோக்கர்களின் கணிப்புப்படி, கட்சியின் மாநிலத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மூத்த தலைவர்கள் அல்லது டெல்லி மேலிடத்திற்கு நெருக்கமானவர்களுக்கே அந்தப் பதவி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் இருந்திருக்கும். அதேநேரம், இந்த இழப்பு குறித்து மேடையிலேயே இவ்வளவு ஆவேசமாக ஆதங்கப்படுவதால், கட்சியின் சீனியாரிட்டி மற்றும் செல்வாக்கு அடிப்படையில் அமைச்சர் விஸ்வநாதனேகூட அந்த DCM பதவிக்கான ரேஸில் மிக முக்கியப் போட்டியாளராக இருந்திருக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.