பீகார் மாநிலம் பாட்னாவில் பட்டப்பகலில் தம்பதியினரை மிரட்டி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமன்புரா பகுதியில், தம்பதியினர் தங்கள் இருசக்கர வாகனத்தில் ஒரு சந்தின் முனையில் நின்று கொண்டிருந்தபோது, ஒரே பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்துள்ளனர்.

மேலும் தம்பதியினர் சுதாரிப்பதற்குள், பைக்கில் இருந்து இறங்கிய இரண்டு கொள்ளையர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியைப் பறிக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கொள்ளையன் ஒருவனின் செல்போன் கீழே விழுந்த போதிலும், அவன் எவ்வித பயமுமின்றி அதை எடுத்துக்கொண்டு மீண்டும் பெண்ணைத் தாக்கி சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளான்.

“>

இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், ஆயுதங்களைக் காட்டி கொள்ளையர்கள் மிரட்டியதால், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஒரு தனியார் பாதுகாப்பு காவலர் கூட அச்சத்தில் ஓடுவதைக் காண முடிகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாட்னாவில் சமீபகாலமாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.