சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் தீவிர திருத்தப் பட்டியலில் உள்ள ‘SIR’ படிவங்கள் நிரப்புவது குறித்துப் பொதுமக்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு விண்ணப்பப் படிவம் முறையாக வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சென்னைக்கு மத்திய அரசு சார்பில் தேர்தல் பார்வையாளர்களை நியமித்து, பணிகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
‘SIR’ படிவம் நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டாலும், அதைச் சிதைக்கும் வேலைகளைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்திய ஜெயக்குமார், திமுகவை நேரடியாக விமர்சித்தார். “திமுக, கள்ள ஓட்டுகளையும், இறந்தவர்களின் பெயரையும் நம்பி இருக்கும் கட்சி. காலம் காலமாக அவர்கள் அந்த வேலையைச் செய்தவர்கள். ‘SIR’ படிவம் வருவதால் இறந்தவர்களின் பெயர் நீக்கப்பட்டுவிடும். ஒருவர் ஒரு ஓட்டு மட்டும்தான் போட முடியும். கள்ள ஓட்டுகள் போட முடியாது” என்று அவர் தெரிவித்தார்.
தற்போது இந்தக் கள்ள ஓட்டுக்கு வாய்ப்பு இல்லாததால், திமுகவுக்கு “திருடனுக்குத் தேள் கொட்டியது போல” ஒரு உணர்வு இருக்கும் என்றும், வரும் காலத்தில் தோல்வி உறுதியானதால் தான் அவர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கின்றனர் என்றும் அவர் சாடினார்.
