ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் உள்ள ஆக்ரா கால்வாயில் உடற்பயிற்சி பயிற்சியாளரான ஆகாஷ் மற்றும் ரஷ்மி என்ற பெண் ஆகிய இருவரின் சடலங்கள் கைகள் டேட்டா கேபிளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த சனிக்கிழமையன்று இவர்கள் இருவரும் பி.பி.டி.பி பாலத்தில் இருந்து ஆக்ரா கால்வாயில் குதித்ததாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ரஷ்மியின் கார் அப்பகுதியில் கேட்பாரற்று நின்றதைக் கண்டறிந்தனர்.

இதனால் அந்த காரை சோதனையிட்டபோது, அதற்குள் இரண்டு மொபைல் போன்களும், ரத்தக் கறை படிந்த ஒரு சுத்தியலும் கண்டெடுக்கப்பட்டது பெரும் மர்மத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, ஞாயிற்றுக்கிழமை மாலை ஷாபூர் கலான் பகுதிக்கு அருகே இவர்களின் சடலங்களை மீட்டனர்.

இந்த வழக்கிற்குப் பின்னால் தீவிரமான கொலைச் சதி இருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. ரஷ்மியின் கணவரான சிவம் குமார், தனது மனைவிக்கு ஆகாஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக சனிக்கிழமையன்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட இருவரின் முகங்களிலும் காயங்கள் இருந்ததும், அவர்களின் கைகள் டேட்டா கேபிளால் ஒன்றாகக் கட்டப்பட்டிருந்ததும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆகாஷின் குடும்பத்தினர் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் ரஷ்மி சுத்தியலால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது கால்வாயில் மூழ்கி இறந்தாரா என்பதையும், இவர்களின் கைகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பதையும் கண்டறிய பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகளை எதிர்நோக்கி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.