தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் 21 வயதை அடைந்த பெண்கள், குடும்பத் தலைவியாக உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டையின் மூலமாக இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குக்கு நேரடியாக உரிமைத்தொகை செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு குடும்பத்திற்கு ஒருவர் என்ற வீதம் அல்லது ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் மத்தியில் குழப்பம் எழுந்த நிலையில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் பயனாளிகள் குறித்த விவரத்தை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என பெயரிடப்பட்டுள்ள பெண் குடும்ப தலைவியாக கருதப்படுவார். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவார்கள். ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்ப தலைவிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் உரிமை தொகை வழங்கப்படும் எனவும் இதற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார். திருமணம் ஆகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவியாக தான் கருதப்படுவார்கள். ஒரு ரேஷன் கார்டில் குடும்பத் தலைவியாக ஒருவர் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசிக்கும் பெண்கள் தனித்தனியாக ரேஷன் அட்டை வைத்திருப்பின் அவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.