தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா பகிர்ந்துள்ள ஒரு பழைய புகைப்படம் தற்போது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிடும் இயக்குநர் ராம்கோபால் வர்மா (RGV), தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒரு விழாவில் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைக்கிறார். அவருக்கு அருகில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நிற்க, கலைஞருக்குப் பின்னால் ஒரு சிறுவன் வேடிக்கை பார்த்தபடி நிற்கிறான். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, இன்றைய தவெக தலைவர் விஜய் தான்.

இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ராம்கோபால் வர்மா, மிகவும் நக்கலான ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடைய பின்னால் நின்று கொண்டிருக்கும் இந்தச் சிறுவன், ஒருநாள் வளர்ந்து தன்னுடைய கட்சியையே (திமுக) வீழ்த்துவான் என்று கலைஞர் தன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த முறை 133 இடங்களை வென்ற திமுக, இந்த முறை வெறும் 59 இடங்களை மட்டுமே பிடித்து ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள விஜய்யின் இந்த வெற்றி, ஆர்.ஜி.வி-யின் இந்தப் பதிவின் மூலம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

ஆர்.ஜி.வி-யின் இந்தப் பதிவிற்கு இணையவாசிகள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “அந்தச் சிறுவன் வீழ்த்தவில்லை, மக்கள் தான் திமுக-வை வீழ்த்தினார்கள்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ, “பின்னால் நிற்பவர்கள் தான் எப்போதும் ஆபத்தானவர்கள்” என்று திரைப் பட வசனங்களைப் போலக் கமெண்ட் செய்துள்ளார். எது எப்படியோ, நாளை தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்க உள்ள விஜய், சிறுவயதில் கலைஞருடன் இருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் ‘டிரெண்டிங்’ ஆகி வருகிறது.