பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19-ஆம் தேதி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் 10,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும், மகாராஷ்டிராவில் 38,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார். அந்த வகையில் கர்நாடக மாநிலத்திற்கு பகல் 12 மணிக்கு செல்லும் பிரதமர் மோடி 2,050 கோடி ரூபாய் நிதி மதிப்பீட்டில் கட்டப்படும் 117 எம்.எல்டி திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன் பிறகு சுமார் 4500 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் கால்வாய்-விரிவாக்க சீரமைப்பு மற்றும் நவீன மயமாக்கல் திட்டம், ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் சூரத்- சென்னை விரைவு சாலையின் ஒரு பகுதியாக கட்டப்படும் 2000 ஆறு வழி சாலையின் பசுமை சாலை திட்டம் போன்றவற்றிற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி 12,600 கோடி மதிப்பீட்டில் மும்பை மெட்ரோ ரயில் திட்டம் 2ஏ,7 போன்றவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மும்பை 1 மொபைல் செயலியையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து 17,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் 7 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன் பிறகு மும்பையில் 3 மருத்துவமனை திட்டங்களுக்கும், மும்பையில் 6, 100 கோடி மதிப்பீட்டில் அமையும் 400 கிலோமீட்டர் தூரம் சாலை திட்டத்தையும், 1800 கோடி மதிப்பீட்டில் சத்ரபதி சிவாஜியின் ரயில்வே நிலையத்தில் மறு சீரமைப்பு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சாலை வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் வங்கி கடன் தொகையையும் பிரதமர் மோடி விடுவிக்கிறார்.