நன்றியுள்ள ஜீவனான நாயை செல்லப்பிராணியாக தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வந்தாலும் தொல்லை தரும் சில செல்லப்பிராணிகளால் ஒட்டுமொத்தமாக நாயை வெறுக்கும் எண்ணம் பலருக்கும் ஏற்பட்டு விடுகின்றது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகராட்சியில் வசிப்போரில் 60% மக்கள் நாய்கள் கடித்து அவதியுற்றதாக நகராட்சிக்கு புகார்கள் சென்றன. அதனைத் தொடர்ந்து சாகர் நகரில் நாய்கள் வளர்த்தால் வரி விதிக்கப்படும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு நகராட்சியின் 40 வார்டு உறுப்பினர்களும் ஆதரவளித்துள்ளனர். நகரவாசிகளின் பாதுகாப்புக்காகவும் நகர தூய்மைக்காகவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளது. இதற்கு நாய் வளர்ப்பு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நாய் வளர்ப்பதற்கு வரி விதிக்க போகும் முதல் நகராட்சி சாகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெல்லி மற்றும் உத்தர பிரதேச மாநிலம் உள்ளிட்ட இந்தியாவின் பல நகரங்களில் நாய் வளர்ப்புக்கு வரி விதிக்கும் நடைமுறை உள்ளது.